ஹரித்வார், ஜன.2- உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்களை அச்சுறுத்து வது போல் பேசிய இந்துத்துவா சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதிகள் ஐந்து பேர், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி யுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார்கள் நடத்திய மாநாட்டில் இந்து ராஷ்டிராவை நிறுவுவதற்கும், தேவைப்பட்டால், இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங் களை எடுத்துக்கொண்டு இந்திய முஸ்லிம் களைக் கொல்வோம்“ என்று வெறித்தனமாகப் பேசினர்.
2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-19 தேதி களில் ஹரித்வாரில் நடைபெற்ற மாநாட்டில் முஸ்லிம்களை தரக்குறைவாக கண்ணி யக்குறைவாக பேசியதற்காக உத்தரகாண்ட் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தற்போது அதில் மேலும் இருவரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான யதி நரசிங்கானந்த் மீது உத்தரப் பிரதேசம், தில்லியிலும் ஏற்கனவே குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) இந்திய தண்டனைச் சட்டத்தின் 295- ஏ- பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப்பிரிவின் கீழ் “எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்ப தன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை கிளறிவிடும் நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு பேசுவதாகும்” குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். மாநாட்டில் கலந்துகொண்ட மற்றொரு பேச்சாளரான சாகர் சிந்து மகராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அசோக் குமார், கூறுகையில், மாநாடு தொடர்பாக வைரலான வீடியோ கிளிப்பு களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மேலும் இருவர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அன்று, நிரஞ்சினி அகடா வின் மகாமண்டலேஷ்வர் மற்றும் இந்து மகாசபா வின் பொதுச் செயலாளரான பூஜா ஷகுன் பாண்டே என்ற அன்னபூர்ணா மா, பீகாரைச் சேர்ந்த தரம்தாஸ் மகராஜ் ஆகியோரின் பெயர்களை காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் யாரும் கைது செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.